Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.81 திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.81

திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை

806

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை அட்ட மூர்த்தியை ஆல நிழலமர் பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

807

பிரமன் மாலறி யாத பெருமையன் தரும மாகிய தத்துவன் எம்பிரான் பரம னாருறை பாண்டிக் கொடுமுடி கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

808

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள் தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி ஈச னேயெனும் இத்தனை யல்லது பேசு மாறறி யாளொரு பேதையே.

809

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப் பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

810

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன் திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக் கருக்கெ டுமிது கைகண்ட யோகமே. (*) இப்பதிகத்தில் 6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழிநாயகியம்மை.