Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.82 திருவான்மியூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.82

திருவான்மியூர் - திருக்குறுந்தொகை

811

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.

812

பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர் மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் தருளு மாவல்ல ஆதியா யென்றலும் மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.

813

மந்த மாகிய சிந்தை மயக்கறுத் தந்த மில்குணத் தானை யடைந்துநின் றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.

814

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற் கள்ள முள்ள வழிக்கசி வானலன் வெள்ள முமர வும்விர வுஞ்சடை வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

815

படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத் தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

816

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார் பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென் றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

817

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக் குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர் சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர் வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

818

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப் பாதி பெண்ணுரு வாய பரமனென் றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர் வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

819

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங் காட்டில் வேவதன் முன்னங் கழலடி நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

820

பார மாக மலையெடுத் தான்றனைச் சீர மாகத் திருவிர லூன்றினான் ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும் வார மாயினன் வான்மியூ ரீசனே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சொக்கநாயகியம்மை.