Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.80 திருஅன்பில்ஆலந்துறை - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.80

திருஅன்பில்ஆலந்துறை - திருக்குறுந்தொகை

796

வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறைக் கோனெஞ் செல்வனைக் கூறிடக் கிற்றியே.

797

கார ணத்தர் கருத்தர் கபாலியார் வார ணத்துரி போர்த்த மணாளனார் ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை நார ணற்கரி யானொரு நம்பியே.

798

அன்பினா னஞ்ச மைந்துட னாடிய என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன் அன்பி லானையம் மானையள் ளூறிய அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே.

799

சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை பங்க னாரடி பாவியே னானுய அங்க ணனெந்தை அன்பிலா லந்துறைச் செங்க ணாரடிச் சேரவும் வல்லனே.

800

கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர் மிக்க ரக்கர் புரமெரி செய்தவர் அக்க ரையினர் அன்பிலா லந்துறை நக்கு ருவரும் நம்மை யறிவரே.

801

வெள்ள முள்ள விரிசடை நந்தியைக் கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார் அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை உள்ள வாறறி யார்சிலர் ஊமரே.

802

பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெ லாஞ்சிந்தித் துன்னி உகவாதே அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை மறவா தேதொழு தேத்தி வணங்குமே.

803

நுணங்கு நூலயன் மாலும் இருவரும் பிணங்கி யெங்குந் திரிந்தெய்த்துங் காண்கிலா அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.

804

பொய்யெ லாமுரைக் குஞ்சமண் சாக்கியக் கையன் மாருரை கேளா தெழுமினோ ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே.

805

இலங்கை வேந்தன் இருபது தோளிற்று மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன் அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.