திருநல்லம் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள் நல்லத் தான்நமை யாளுடை யான்கழல் சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன் நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.
பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற் பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள் அணுக வேண்டில் அரனெறி யாவது நணுகு நாதன் நகர்திரு நல்லமே.
தமக்கு நல்லது தம்முயிர் போயினால் இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான் உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி நமக்கு நல்லது நல்ல மடைவதே.
உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம் நரைவி டையுடை யானிடம் நல்லமே பரவு மின்பணி மின்பணி வாரொடே விரவு மின்விர வாரை விடுமினே.
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும் வல்ல வாறு சிவாய நமவென்று நல்லம் மேவிய நாத னடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும் பேத மாகிப் பிரிவதன் முன்னமே நாதன் மேவிய நல்லம் நகர்தொழப் போது மின்னெழு மின்புக லாகுமே.
வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர் செம்மை யாய சிவகதி சேரலாஞ் சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ நம்மை யாளுடை யானிடம் நல்லமே.
கால மான கழிவதன் முன்னமே ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின் மாலும் மாமல ரானொடு மாமறை நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.
மல்லை மல்கிய தோளரக் கன்வலி ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.