திருவேட்களம் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.42 திருவேட்களம் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
நன்று நாடொறும் நம்வினை போயறும் என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே.
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே.
வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர் பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால் காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.
அல்ல லில்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடு மணாளனார் செல்வ னார்திரு வேட்களங் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே.
துன்ப மில்லை துயரில்லை யாமினி நம்ப னாகிய நன்மணி கண்டனார் என்பொ னாருறை வேட்கள நன்னகர் இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே.
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர் சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப் பட்ட வல்வினை யாயின பாறுமே.
வட்ட மென்முலை யாளுமை பங்கனார் எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார் சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு திட்ட மாகி யிருமட நெஞ்சமே.
நட்ட மாடிய நம்பனை நாடொறும் இட்டத் தாலினி தாக நினைமினோ வட்ட வார்முலை யாளுமை பங்கனார் சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே.
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண் சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ் சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.
சேட னாருறை யுஞ்செழு மாமலை ஓடி யாங்கெடுத் தான்முடி பத்திற வாட வூன்றி மலரடி வாங்கிய வேட னாருறை வேட்களஞ் சேர்மினே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.