திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.44 திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
மாமாத் தாகிய மாலயன் மால்கொடு தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி ஆமாத் தூரர னேஅரு ளாயென்றென் றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.
சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள் புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும் அந்தி யானை ஆமத்தூர் அழகனைச் சிந்தி யாதவர் தீவினை யாளரே.
காமாத் தம்மெனுங் கார்வலைப் பட்டுநான் போமாத் தையறி யாது புலம்புவேன் ஆமாத் தூரர னேயென் றழைத்தலுந் தேமாத் தீங்கனி போலத்தித் திக்குமே.
பஞ்ச பூத வலையிற் படுவதற் கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.
குராம னுங்குழ லாளொரு கூறனார் அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர் இராம னும்வழி பாடுசெய் ஈசனை நிராம யன்றனை நாளும் நினைமினே.
பித்த னைப்பெருந் தேவர் தொழப்படும் அத்த னையணி யாமாத்தூர் மேவிய முத்தி னையடி யேனுள் முயறலும் பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே.
நீற்றி னார்திரு மேனியன் நேரிழை கூற்றி னான்குழல் கோலச் சடையிலோர் ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே.
பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க் கண்ணித் தாகும் அமுதினை ஆமாத்தூர் சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர் கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.
குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா மிண்ட ரோடெனை வேறு படுத்துயக் கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்டத் தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே.
வானஞ் சாடு மதியர வத்தொடு தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத் தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும் ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே.
விடலை யாய்விலங் கல்லெடுத் தான்முடி அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர் இடம தாக்கொண்ட ஈசனுக் கென்னுளம் இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே. இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அழகியநாதர், தேவியார் - அழகியநாயகியம்மை.