Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.41

திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை

407

உடையர் கோவண மொன்றுங் குறைவிலர் படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார் சடையிற் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க் கில்லை அவலமே.

408

மத்த மாமலர் சூடிய மைந்தனார் சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம் அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.

409

விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான் பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர் தம்வினை தூளியே.

410

ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே நின்ற சூழ லறிவரி யானிடஞ் சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள் என்றும் மேவி யிருந்த அடிகளே.

411

வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார் தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர் தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார் யாழின் பாட்டை யுகந்த அடிகளே.

412

குண்டு பட்டுக் குறியறி யாச்சமண் மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான் கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.

413

வரிப்பை யாடர வாட்டி மதகரி உரிப்பை மூடிய வுத்தம னாருறை திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய் இருப்பர் வானவ ரோடினி தாகவே.

414

கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார் பேடு மாணும் பிறரறி யாததோர் ஆடு நாகம் அசைத்த அடிகளே.

415

காரு லாமலர்க் கொன்றையந் தாரினான் வாரு லாமுலை மங்கையோர் பங்கினன் தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.

416

தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளுமெம் மானிடம் இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - விசாலாட்சியம்மை.