Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.19 திருநெல்லிக்கா (197-207)

திருஞானசம்பந்தர்

2.19

திருநெல்லிக்கா (197-207) பண் - இந்தளம்

197

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள் நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

198

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல் மதிதா னதுசூ டியமைந் தனுந்தான் விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

199

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

200

தலைதா னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

201

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல் உவந்தான் சுறவேந் தனுரு வழியச் சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில் நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

202

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான் குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

203

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் இறைதான் இறவாக் கயிலை மலையான் மறைதான் புனலொண் மதிமல் குசென்னி நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

204

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக் குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

205

தழல்தா மரையான் வையந்தா யவனுங் கழல்தான் முடிகா ணியநா ணொளிரும் அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

206

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன் மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

207

புகரே துமிலா தபுத்தே ளுலகின் நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன பகர்வா ரவர்பா வமிலா தவரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.