Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.33 நமக்கடிகளாகிய - அடிகள் பண் - கொல்லி

சுந்தரமூர்த்தி நாயனார்

7.33

நமக்கடிகளாகிய - அடிகள் பண் - கொல்லி

330

பாறுதாங்கிய காடரோபடு தலையரோமலைப் பாவையோர் கூறுதாங்கிய குழகரோகுழைக் காதரோகுறுங் கோட்டிள ஏறுதாங்கிய கொடியரோசுடு பொடியரோஇலங் கும்பிறை ஆறுதாங்கிய சடையரோநமக் கடிகளாகிய அடிகளே.

331

இட்டிதாகவந் துரைமினோநுமக் கிசையுமாநினைந் தேத்துவீர் கட்டிவாழ்வது நாகமோசடை மேலும்நாறு கரந்தையோ பட்டியேறுகந் தேறரோபடு வெண்டலைப்பலி கொண்டுவந் தட்டியாளவுங் கிற்பரோநமக் கடிகளாகிய அடிகளே.

332

ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக் கிசையுமாநினைந் தேத்துவீர் குன்றிபோல்வதோ ருருவரோகுறிப் பாகிநீறுகொண் டணிவரோ இன்றியேயிலர் ஆவரோஅன்றி உடையராயிலர் ஆவரோ அன்றியேமிக அறவரோநமக் கடிகளாகிய அடிகளே.

333

தேனையாடுமுக் கண்ணரோமிகச் செய்யரோவெள்ளை நீற்றரோ பானெய்ஆடலும் பயில்வரோதமைப் பற்றினார்கட்கு நல்லரோ மானைமேவிய கண்ணினாள்மலை மங்கைநங்கையை அஞ்சவோர் ஆனையீருரி போர்ப்பரோநமக் கடிகளாகிய அடிகளே.

334

கோணல்மாமதி சூடரோகொடு கொட்டிகாலர் கழலரோ வீணைதானவர் கருவியோ விடையேறுவேத முதல்வரோ நாணதாகவோர் நாகங்கொண்டரைக் கார்ப்பரோநல மார்தர ஆணையாகநம் மடிகளோநமக் கடிகளாகிய அடிகளே.

335

வந்துசொல்லுமின் மூடனேனுக்கு வல்லவாநினைந் தேத்துவீர் வந்தசாயினை அறிவரோதம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ புந்தியாலுரை கொள்வரோஅன்றிப் பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ அன்றியேமிக அறவரோநமக் கடிகளாகிய அடிகளே.

336

மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக் கிசையுமாநினைந் தேத்துவீர் கையிற்சூலம துடையரோகரி காடரோகறைக் கண்டரோ வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை ஏறரோகடை தோறுஞ்சென் றையங்கொள்ளுமவ் வடிகளோநமக் கடிகளாகிய அடிகளே.

337

நீடுவாழ்பதி உடையரோஅயன் நெடியமாலுக்கு நெடியரோ பாடுவாரையும் உடையரோதமைப் பற்றினார்கட்கு நல்லரோ காடுதானரங் காகவேகைகள் எட்டினோடில யம்பட ஆடுவாரெனப் படுவரோநமக் கடிகளாகிய அடிகளே.

338

நமணநந்தியுங் கருமவீரனுந் தருமசேனனு மென்றிவர் குமணமாமலைக் குன்றுபோனின்று தங்கள்கூறையொன் றின்றியே ஞமணஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா அமணராற்பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே.

339

படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந் தேத்தினேன்பணி யீரருள் வடிவிலான்றிரு நாவலூரன் வனப்பகையப்பன் வன்றொண்டன் செடியனாகிலுந் தீயனாகிலுந் தம்மையேமனஞ் சிந்திக்கும் அடியனூரனை ஆள்வரோநமக் கடிகளாகிய அடிகளே.