Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.84 திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.84

திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை

831

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங் கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங் காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

832

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

833

தேனை வென்றசொல் லாளொடு செல்வமும் ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.

834

அருத்த முமனை யாளொடு மக்களும் பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங் கருத்தன் கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித் திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.

835

சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும் அற்ற போதணை யாரவ ரென்றென்றே கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப் பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.

836

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந் துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.

837

மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார் பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின் கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம் ஐயன் றன்னடி யேயடைந் துய்மினே.

838

வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர் சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள் காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை நீல கண்டனை நித்தல் நினைமினே.

839

இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள் ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள் அன்று வானவர்க் காக விடமுண்ட கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.

840

எண்ணி லாவரக் கன்மலை யேந்திட எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன் கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை நண்ணு வாரவர் தம்வினை நாசமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆரணியசுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.