Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.74 திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.74

திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை

741

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன் இரும்பி னூறல றாததோர் வெண்டலை எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

742

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க் கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல் நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

743

மருந்து வானவர் தானவர்க் கின்சுவை புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

744

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

745

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந் துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும் எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.

746

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில் திறம்பி யூர்வன மற்றும் பலவுள குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை எறும்பி யூரரன் செய்த இயற்கையே.

747

மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந் திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை எறும்பி யூரரன் செய்த இயற்கையே.

748

இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு துன்ப மும்முட னேவைத்த சோதியான் அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.

749

கண்ணி றைந்த கனபவ ளத்திரள் விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான் உண்ணி றைந்துரு வாயுயி ராயவன் எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.

750

நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும் நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - எறும்பீசுவரர், தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.