Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.72 திருநீலக்குடி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.72

திருநீலக்குடி - திருக்குறுந்தொகை

721

வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் செத்த போது செறியார் பிரிவதே நித்த நீலக் குடியர னைந்நினை சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

722

செய்ய மேனியன் றேனொடு பால்தயிர் நெய்ய தாடிய நீலக் குடியரன் மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங் கையி லாமல கக்கனி யொக்குமே.

723

ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு கூற்றன் மேனியிற் கோலம தாகிய நீற்றன் நீலக் குடியுடை யானடி போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.

724

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் நீலன் நீலக் குடியுறை நின்மலன் கால னாருயிர் போக்கிய காலனே.

725

நேச நீலக் குடியர னேயெனா நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய் நாச மானார் திரிபுர நாதரே.

726

கொன்றை சூடியைக் குன்ற மகளொடு நின்ற நீலக் குடியர னேயெனீர் என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.

727

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.

728

அழகி யோமிளை யோமெனு மாசையால் ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே நிழல தார்பொழில் நீலக் குடியரன் கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.

729

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

730

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் அரக்க னாருட லாங்கோர் விரலினால் நெரித்து நீலக் குடியரன் பின்னையும் இரக்க மாயருள் செய்தனன் என்பரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - நீலநிறவுமையம்மை.