Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.56 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.56

திருக்கோளிலி - திருக்குறுந்தொகை

563

மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் தொக்க கையினன் செய்யதோர் சோதியன் கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

564

முத்தி னைமுத லாகிய மூர்த்தியை வித்தி னைவிளை வாய விகிர்தனைக் கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே.

565

வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக் கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

566

பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி நிலவி னான்றனை நித்தல் நினைமினே.

567

அல்ல லாயின தீரும் அழகிய முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச் செல்வன் சேவடி சென்று தொழுமினே.

568

ஆவின் பால்கண் டளவில் அருந்தவப் பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல் கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி மேவி னானைத் தொழவினை வீடுமே.

569

சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற் கூத்த னாருறை யுந்திருக் கோளிலி ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.

570

மால தாகி மயங்கு மனிதர்காள் காலம் வந்து கடைமுடி யாமுனங் கோல வார்பொழிற் கோளிலி மேவிய நீல கண்டனை நின்று நினைமினே.

571

கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி ஈசனைப் பாடு மின்னிர வோடு பகலுமே.

572

மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள் கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கோளிலிநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.