Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.55 திருநாரையூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.55

திருநாரையூர் - திருக்குறுந்தொகை

553

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும் நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக் காறு சூடலும் அம்ம அழகிதே.

554

புள்ளி கொண்ட புலியுரி யாடையும் வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும் நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.

555

வேடு தங்கிய வேடமும் வெண்டலை ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும் நாடு தங்கிய நாரையூ ரான்நடம் ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.

556

கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக் கக்கி னாரமும் அம்ம அழகிதே.

557

வடிகொள் வெண்மழு மானமர் கைகளும் பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும் நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர் அடிகள் தம்வடி வம்ம அழகிதே.

558

சூல மல்கிய கையுஞ் சுடரொடு பாலு நெய்தயி ராடிய பான்மையும் ஞால மல்கிய நாரையூர் நம்பனுக் கால நீழலும் அம்ம அழகிதே.

559

பண்ணி னான்மறை பாடலொ டாடலும் எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும் நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர் அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.

560

என்பு பூண்டெரு தேறி இளம்பிறை மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே நன்ப கற்பலி தேரினும் நாரையூர் அன்ப னுக்கது அம்ம அழகிதே.

561

முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே இரவி னின்றெரி யாடலு நீடுவான் நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக் கரவும் பூணுதல் அம்ம அழகிதே.

562

கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும் நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல் அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சவுந்தரேசுவரர், தேவியார் - திருபுரசுந்தரநாயகி.