திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல் மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுங் கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை சேர்கழற்கே தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல் வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் கழகியதே.
அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்துகொள்வான் விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன் துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேற் றிளைக்கும் மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும் பேர்ந்தகை மானட மாடுவர் பின்னு சடையிடையே சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் துறையுறைவார் ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் கழகியதே.
கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவை நீற்றில் துதைந்து திரியும் பரிசது நாமறியோம் ஆற்றிற் கிடந்தங் கலைப்ப அலைப்புண் டசைந்ததொக்குஞ் சோற்றுத் துறையுறை வார்சடை மேலதோர் தூமதியே.
வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர் கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்திறைஞ்சச் சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறையுறைவார் வில்லாடி நின்ற நிலையெம் பிரானுக் கழகியதே.
ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக் காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் துயக்கறுத்தான் தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேற் பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் கழகியதே.
அண்டர் அமரர் கடைந் தெழுந் தோடிய நஞ்சதனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்கோன் தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியான் விடமணி கண்ட முடையவன் றானெனை ஆளுடையான் சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேற் படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே.
இலங்கைக் கிறைவன் இருபது தோளு முடிநெரியக் கலங்க விரலினா லூன்றி அவனைக் கருத்தழித்த துலங்கல் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல் இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.