Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.41 திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்

திருஞானசம்பந்தர்

3.41

திருவேகம்பம் - திருவிருக்குக்குறள் பண் - கொல்லி

433

கருவார் கச்சித், திருவே கம்பத் தொருவா வென்ன, மருவா வினையே.

434

மதியார் கச்சி, நதியே கம்பம் விதியா லேத்தப், பதியா வாரே.

435

கலியார் கச்சி, மலியே கம்பம் பலியாற் போற்ற, நலியா வினையே.

436

வரமார் கச்சிப், புரமே கம்பம் பரவா ஏத்த, விரவா வினையே.

437

படமார் கச்சி, இடமே கம்பத் துடையா யென்ன, அடையா வினையே.

438

நலமார் கச்சி, நிலவே கம்பம் குலவா வேத்தக், கலவா வினையே.

439

கரியின் னுரியன், திருவே கம்பன் பெரிய புரமூன், றெரிசெய் தானே.

440

இலங்கை யரசைத், துலங்க வூன்றும் நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.

441

மறையோன் அரியும், அறியா வனலன் நெறியே கம்பம், குறியால் தொழுமே.

442

பறியாத் தேரர், நெறியில் கச்சிச் செறிகொள் கம்பம், குறுகு வோமே.

443

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம் மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.