Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.40 தனித்திருவிருக்குக்குறள் பொது - திருப்பதிகம்

திருஞானசம்பந்தர்

3.40

தனித்திருவிருக்குக்குறள் பொது - திருப்பதிகம் பண் - கொல்லி

422

கல்லால் நீழல், அல்லாத் தேவை நல்லார் பேணார், அல்லோம் நாமே.

423

கொன்றை சூடி, நின்ற தேவை அன்றி யொன்று, நன்றி லோமே.

424

கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன் சொல்லா தாரோ, டல்லோம் நாமே.

425

கூற்று தைத்த, நீற்றி னானைப் போற்று வார்கள், தோற்றி னாரே.

426

காட்டு ளாடும், பாட்டு ளானை நாட்டு ளாருந், தேட்டு ளாரே.

427

தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த மிக்க தேவர், பக்கத் தோமே.

428

பெண்ணா ணாய, விண்ணோர் கோவை நண்ணா தாரை, எண்ணோம் நாமே.

429

தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை ஆத்த மாக, ஏத்தி னோமே.

430

பூவி னானுந், தாவி னானும் நாவி னாலும், ஓவி னாரே.

431

மொட்ட மணர், கட்ட தேரர் பிட்டர் சொல்லை, விட்டு ளோமே.

432

அந்தண் காழிப், பந்தன் சொல்லைச் சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே.