Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.21 திருக்கழிப்பாலை

திருஞானசம்பந்தர்

2.21

திருக்கழிப்பாலை பண் - இந்தளம்

219

புனலா டியபுன் சடையாய் அரணம் அனலா கவிழித் தவனே அழகார் கனலா டலினாய் கழிப்பா லையுளாய் உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

220

துணையா கவொர்தூ வளமா தினையும் இணையா கவுகந் தவனே இறைவா கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய் இணையார் கழலேத் தவிடர் கெடுமே.

221

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின் முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய் கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் அடியார்க் கடையா அவலம் மவையே.

222

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ வளிகா யமென வெளிமன் னியதூ ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க் களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

223

நடநண் ணியொர்நா கமசைத் தவனே விடநண் ணியதூ மிடறா விகிர்தா கடல்நண் ணுகழிப் பதிகா வலனே உடன்நண் ணிவணங் குவனுன் னடியே.

224

பிறையார் சடையாய் பெரியாய் பெரியம் மறையார் தருவாய் மையினா யுலகிற் கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் இறையார் கழலேத் தவிடர் கெடுமே.

225

முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் கதிரும் வினையா யினஆ சறுமே.

226

எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடியே.

227

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக் கனலா னவனே கழிப்பா லையுளாய் உனவார் கழலே தொழுதுன் னுமவர்க் கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.

228

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந் துவர்கொண் டனநுண் துகிலா டையரும் அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும் உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.

229

கழியார் பதிகா வலனைப் புகலிப் பழியா மறைஞா னசம்பந் தனசொல் வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார் கெழியார் இமையோ ரொடுகே டிலரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.