திருநல்லூர் பண் - குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.86 திருநல்லூர்
திருஞானசம்பந்தர்
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும் வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறு மடியார்கட் கடையா குற்றமே.
சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப் பாடும் மடியார்கட் கடையா பாவமே.
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக் காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.
ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத் தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர் போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.
கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச் செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச் சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.
எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும் நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல் தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.
காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன் நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர் தீப மனத்தார்கள் அறியார் தீயவே.
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத் தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.
பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர் நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே.
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன் நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை வண்ணம் புனைமாலை வைகலேத்துவார் விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.