திரு ஈங்கோய்மலை பண் - தக்கேசி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.70 திரு ஈங்கோய்மலை
திருஞானசம்பந்தர்
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக் கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார் ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.
கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார் எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப் பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும் இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார் கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப் பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும் எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.
நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும் ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ் சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும் எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால் நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும் பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.
பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும் மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும் உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.
விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள் அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன் எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன் கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.