Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.69 திரு அண்ணாமலை

திருஞானசம்பந்தர்

1.69

திரு அண்ணாமலை பண் - தக்கேசி

743

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார் தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும் ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

744

மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார் நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும் வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.

745

ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும் ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண் ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

746

இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார் பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம் அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.

747

உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார் பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம் அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.

748

எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார் நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில் கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.

749

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில் முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல் அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

750

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள் நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார் திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.

751

தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென் றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.

752

தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும் பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள் வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில் அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.

753

அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன் சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.