Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

5.02 குலச்சிறை நாயனார் புராணம்

சேக்கிழார்

1700

பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச் செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல் துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது மன்னு வண்மையினார் மண மேற்குடி

1701

அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்

1702

காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார்

1703

குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்

1704

உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் அலகில் தீமையர் ஆயினும் அம்புலி இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில் தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார்

1705

பண்பு மிக்கார் பலராய் அணையினும் உண்ப வேண்டி ஒருவர் அணையினும் எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்

1706

பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் பாதம் நாளும் பரவிய பண்பினார்

1707

இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த் தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ் மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார்

1708

ஆய செய்கையர் ஆயவர் ஆறணி நாயனார் திருப் பாதம் நவின்று உளார் பாய சீர் புனை பாண்டி மா தேவியார் மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார்

1709

புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும் தென்னர் நாடு திருநீறு போற்றவும் மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்

1710

வாதில் தோற்ற அமணரை வன் கழுத் தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் வேத நீதி மிழலைக் குறும்பர் தாள்