Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

5.01 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

சேக்கிழார்

1271

திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்

1272

தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு

1273

புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்

1274

காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை

1275

கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்

1276

கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம்

1277

நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால்

1278

மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும் கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி

1279

மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை

1280

எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும்

1281

மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு

1282

இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்

1283

ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்

1284

மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள்

1285

தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்லைவேளாண் குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும்

1286

அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்

1287

புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார்

1288

திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்

1289

மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார்

1290

மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார்

1291

தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார்

1292

அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்

1293

ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார்

1294

அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்

1295

கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார்

1296

வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார்

1297

ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்

1298

மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப் பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்

1299

தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்

1300

ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்

1301

வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்

1302

எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார்

1303

அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்

1304

தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்

1305

மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்

1306

கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்

1307

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்

1308

பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்

1309

அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்

1310

அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண் உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார்

1311

அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்

1312

பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்

1313

சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார்

1314

புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்

1315

நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து

1316

தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால்

1317

தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்

1318

மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி

1319

பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால்

1320

அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார்

1321

அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார்

1322

அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்

1323

புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார்

1324

தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று

1325

குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த

1326

ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான்

1327

கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்

1328

என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்

1329

அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என

1330

எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார்

1331

பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார்

1332

சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்

1333

வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து

1334

தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார்

1335

மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார்

1336

என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார்

1337

திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்

1338

நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார்

1339

திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்

1340

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம் போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால்

1341

மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே

1342

அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார்

1343

பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார்

1344

மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே

1345

இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே

1346

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே

1347

மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் கையில் திகழும் உழவாரமுடன் கைக் கொண்டு கலந்து கசிந்தனரே

1348

மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத் தன்மைப் பதி மேவியதா பதியார் பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே

1349

இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம் பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்

1350

தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்

1351

மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்

1352

இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்

1353

தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார்

1354

சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்

1355

உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார்

1356

அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான்

1357

கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்

1358

விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான்

1359

தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்

1360

அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் தெருள் கொண்டோ ர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான்

1361

அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்

1362

சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார்

1363

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார்

1364

ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்

1365

பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார்

1366

அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார்

1367

ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்

1368

வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே

1369

மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்

1370

ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள்

1371

ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார்

1372

அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்

1373

ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார்

1374

நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்

1375

பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ

1376

அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார்

1377

நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார்

1378

மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார்

1379

மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான்

1380

கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்

1377

பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால்

1378

. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே

1379

மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே

1380

பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்

1381

அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்

1382

வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்

1383

தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்

1384

ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே

1385

ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே

1386

யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித் தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான்

1387

நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்

1388

அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச் சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார்

1389

ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்

1390

அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர்

1391

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்

1392

சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு பற்றி உணர்வினால் பதிகம் பாடினார்

1393

பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே

1394

அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார்

1395

இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ

1396

அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம்

1397

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்

1398

அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே

1399

தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார்

1400

ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே

1401

மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார்

1402

தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார்

1403

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்

1404

மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார்

1405

மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே

1406

தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே

1407

கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டாய்ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே

1408

இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே

1409

உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்

1410

அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள்

1411

புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்

1412

வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்

1413

இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்

1414

திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார்

1415

கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்

1416

புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார்

1417

. பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்

1418

நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில் சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த

1419

ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்

1420

தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து

1421

வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம் கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார்

1422

ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்

1423

நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால் மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார்

1424

முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிக் கண்டு உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வயல் எங்கும்

1425

அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார்

1426

அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை

1427

அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார்

1428

அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி

1429

நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப் பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள்

1430

மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும் கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார்

1431

வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன் கோபுரம் அது புகுவார் முன் களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார்

1432

நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத் தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார்

1433

கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்

1434

இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார்

1435

பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலைப் பாடி கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்

1436

நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்

1437

அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டு பெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட

1438

மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ

1439

சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார்

1440

மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார்

1441

அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேலி ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்

1442

செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்

1443

கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண் விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்

1444

ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல காழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த

1445

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப் பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார்

1446

தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்

1447

நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் காண்டகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார்

1448

தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி எழுதரிய மலக்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்

1449

அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்

1450

பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும் வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்

1451

அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே

1452

பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச் சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி

1453

பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்

1454

அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்

1455

ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும் காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்

1456

மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார்

1457

ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2 பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு கைத் தொண்டு போற்றிச் செய்வார்

1458

எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார்

1459

சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும் என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார்

1460

கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்

1461

நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம் சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்

1462

நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று புனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார்

1463

நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித் தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள்

1464

கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார்

1465

ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்

1466

அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்

1467

அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண

1468

மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்

1469

காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து

1470

திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார்

1471

ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்

1472

தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்

1473

தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்

1474

அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்

1475

அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்

1476

திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்

1477

புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்

1478

எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார்

1479

சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார்

1480

அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்

1481

நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி

1482

நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக் சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார்

1483

பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்

1484

ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார்

1485

வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார்

1486

பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்

1487

சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்

1488

கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து

1489

காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்

1490

செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக் கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே

1491

மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்

1492

நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்

1493

நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடி தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில்

1494

நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே

1495

மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில் தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே

1496

திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் பொருப்பரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்

1497

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும் பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை

1498

ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்

1499

கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே

1500

திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர் வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார்

1501

சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை

1502

அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்

1503

மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில்

1504

அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப் பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார்

1505

தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்

1506

சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்

1507

அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்

1508

பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண் வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்

1509

ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப் பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்

1510

திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப் பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்

1511

அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார்

1512

திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார்

1513

செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்

1514

சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார்

1515

சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை

1516

வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார்

1517

மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்

1518

சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்

1519

கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க

1520

முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப் பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய் அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்

1521

சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால்

1522

வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார்

1523

கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்

1524

விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில் எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும்

1525

அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்

1526

ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால் தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால் காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால் வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர்

1527

ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால் ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில்

1528

காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார்

1529

வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச் சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார்

1530

மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு

1531

பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார்

1532

தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார்

1533

ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர் ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத் தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர்

1534

உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்

1535

வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம் காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்

1536

அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும் இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்

1537

புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில் கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என

1538

சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில்

1539

அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார் எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்

1540

அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்

1541

அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்

1542

மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம் பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும் துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார்

1543

போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள

1544

சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல் நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால்

1545

அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்

1546

அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என

1547

மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்

1548

பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார்

1549

ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்

1550

ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார் போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண

1551

வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வனவத் தீங்கும் உளவாமோ இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்

1552

சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும் பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத் தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர்

1553

ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார்

1554

என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார்

1555

போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார்

1556

வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்

1557

சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார்

1558

வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத் தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார்

1559

பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார்

1560

செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம் பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி

1561

அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்

1562

வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார்

1563

அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக் குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி

1564

கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான்

1565

ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின் மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்

1566

தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும் நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்

1571

பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார் தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய் எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச் செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார்

1572

சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின் சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார்

1573

மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச் செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார்

1574

வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும் அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்

1575

காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால் மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம்

1576

அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப் பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்

1577

நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்

1578

எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவ என்று உரைப்ப ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார்

1579

கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம் ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார்

1580

பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்

1581

நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார்

1582

செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்

1583

அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம் கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன் பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார்

1584

பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள் மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார் அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்

1585

காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும் சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச் சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார்

1586

செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில் புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத் தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார்

1587

செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம் உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித் தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்

1588

ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால் சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார்

1589

மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம் தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்ணள் காஞ்சி அலங்கரித்தார்

1590

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால் கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார்

1591

எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார் அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்

1592

திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப் பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார்

1593

வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம் ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச் சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்

1594

கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்

1595

கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள்

1596

சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம் நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார்

1597

அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித் துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்

1598

ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்

1599

திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார் நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப் பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார்

1600

நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப் பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய் மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்

1601

திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும் பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத் தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர் மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்

1602

வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும் தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்

1603

ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப் பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்

1604

திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார் கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார்

1605

எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத் தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்

1606

வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப் பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்

1607

விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள் களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார்

1608

அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள் எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள் பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார்

1609

திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும் விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப் பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்

1610

முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும் சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்

1611

அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார்

1612

திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப் பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்

1613

பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார்

1614

பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில் முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர் மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார்

1611

காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்

1612

மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும் சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத் தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்

1613

சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம் காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்

1614

அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப் பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார் துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின் செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார்

1615

மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல் ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்

1616

அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச் செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர் கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்

1617

கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால் வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்

1618

அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார்

1619

அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்

1620

மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச் சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்

1621

ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன் தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால் வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார்

1622

வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல் செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்

1623

இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார் பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்

1624

கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்

1625

மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச் சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்

1626

அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச் செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்

1627

அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால்

1628

வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார்

1629

மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப் பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்

1630

வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன் கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற

1631

கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால் வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி

1632

மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்

1633

ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால் ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்

1634

அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம் நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்

1635

தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்

1636

ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப் பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்

1637

ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப

1638

வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார் எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண் பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்

1639

மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்

1640

பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில் தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப் பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்

1641

காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர் பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத் தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க

1642

தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக் காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப

1643

கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப் பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற

1644

அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக

1645

வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம் கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்

1646

கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்

1647

முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப் பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள் இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்

1648

ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித் தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம் சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ

1649

ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச் செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து

1650

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்

1651

கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்

1652

நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித் தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார்

1653

சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச் சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார்

1654

திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி

1655

அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத் திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்

1656

பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும் செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்

1657

பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத் தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்

1658

தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப் பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார்

1659

சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால் எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்

1660

காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார் சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்

1661

வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின் சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால்

1662

திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார்

1663

பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத் துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்

1664

கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச் செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள் தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்

1665

வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால் புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில் எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்

1666

பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர் எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர் மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்

1671

பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்

1672

ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார்

1673

சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்

1674

எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்

1675

சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்

1676

திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்

1677

கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்

1678

தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர்

1679

தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால் பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார்

1680

அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்

1681

தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்

1682

தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார்

1683

பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில் கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன் வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்

1684

நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார்

1685

ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும் நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்

1686

அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார்

1687

செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்

1688

புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார்

1689

வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்

1690

கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப் பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்

1691

ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்

1692

இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்

1693

இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்

1694

மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார்

1695

இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும் அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்

1696

மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்

1697

மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்

1698

வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்

1699

அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்