9. திருவிடைமருதூர்
கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
9. திருவிடைமருதூர்
கருவூர்த்தேவர்
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின் அழிவழ கியதிரு நீற்று மைய செங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே.
இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு) இணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாகம் மேகலை அரையா அகந்தொறும் பலிதிரி அடிகள் தந்திரி வீணை கீதமும் பாடச் சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடம் திருவிடை மருதே.
பனிபடு மதியம் பயில்கொழுந் தன்ன பல்லவம் வல்லியென்(று) இங்ஙன் வினைபடு கனகம் போலயா வையுமாய் வீங்குல(கு) ஒழிவற நிறைந்து துனிபடு கலவி மலைமகள் உடனாய்த் தூக்கிருள் நடுநல்யா மத்தென் மனனிடை அணுகி நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
அணியுமிழ் சோதி மணியுனுள் கலந்தாங்கு அடியனேன் உள்கலந்து அடியேன் பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன் படர்சடை விடம்மிடற்(று) அடிகள் துணியுமிழ் ஆடை அரையிலோர் ஆடை கடர்உமிழ் தரஅதன் அருகே மணியுமிழ் நாகம் அணியுமிழ்ந்(து) இமைப்ப மருவிடம் திருவிடைமருதே.
பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவல் படிவழி சென்று சென்றேறிச் சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் எந்தையும் தாயும் யானுமென் றிங்ஙன் எண்ணில்பல் லூழிகள் உடனாய் வந்தணு காது நுணிகியுள் கலந்தோன் மருவிடம் திருவிடைமருதே.
எரிதரு கரிகாட்(டு) இடுபிணம் நிணமுண்(டு) ஏப்பமிட்(டு) இலங்ககெயிற்(று) அழல்வாய்த் துருகழல் நெடும்பேய்க் கணம்எழுந்தாடும் தூங்கிருள் நடுநல்யா மத்தே அருள்புரி முறுவல் முகில்நிலா எறிப்ப அந்திபோன்(று) ஒளிர்திரு மேனி வரியர(வு) ஆட ஆடும்எம் பெருமான் மருவிடம் திருவிடைமருதே.
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின் இன்துளி படநனைந்(து) உருகி அழலையாம் புருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித் தொழிலையாழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கிருள் நடுநல்யா மத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடம் திருவிடை மருதே.
வையவாம் பெற்றம் பெற்றம்ஏ(று) உடையார் மாதவர் காதல்வைத் தென்னை வெய்யவாம் செந்தீப் பட்டஇட் டிகைபோல் விழுமியோன் முன்புபின்(பு) என்கோ நொய்யவா றென்ன வந்துள்வீற் றிருந்த நூறுநூ றாயிர கோடி மையவாங் கண்டத்(து) அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடை மருதே.
கலங்கலம் பொய்கைப் புனற்றெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு நலம் கலந்(து) அடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே வம்பனே னுடைய புலங்கலந் தவனே ! என்று நின்(று) உருகிப் புலம்புவார் அலம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான் மருவிடம் திருவிடைமருதே.
ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள் உறங்கிருள் நடுநல்யா மத்தோர் கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம் கலந்தெனக் கலந்துணர் கருவூர் தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை தடம்பொழில் மருதயாழ் உதிப்ப வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன் மருவிடம் திருவிடைமருதே.