4. திருமுகத் தலை
கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
4. திருமுகத் தலை
கருவூர்த்தேவர்
புவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே பூரணா ! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ ! பன்னகா பரணா ! அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே.
புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் விழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே.
கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன் முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும் பன்னகா பரணா பவளவாய் மணியே ! பாவியேன் ஆவியுள் புகுந்த(து) என்னகா ரணம்? நீ ஏழைநாய் அடியேற்கு எளிமையோ பெருமையா வதுவே.
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க் கிடையனா ருடையஎன் நெஞ்சில் பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும் பரமனே ! பன்னகா பரணா ! மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை விளைந்து நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !
அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து) ஐவரோ(டு) என்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு) என்னைஆள் ஆண்டநாய கனே ! முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே ! முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே.
விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும் கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும் கழுத்திலோர் தனிவடங் கட்டி முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை அகத்தமர்ந் தாயைப் பிரியுமா றுளதே பேய்களாம் செய்த பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து) என்பெலாம் உருகநீ எளிவந்(து) உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே ! முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனிமையாய் இனையே.
அம்பரா அனலா; அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவி உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்த¨l அகத்தமர்ந்(து) எனக்கே எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயுமா யினையே.
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தவை அகத்தமர்ந்(து) இனிய பாலுமாய், அமுதாப் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல் ஆலயம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே. 5. திரைலோக்கிய சுந்தரம்
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று) ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா !நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில் முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால் வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண் செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது இஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்? மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினறு செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்; ஆவா !என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவா !தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும் பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம் அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய் உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய் துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய் செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல் நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ் நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம் தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காஎம் பெருமானே ! முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும் திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே.