Skip to content
Thiruvisaippa & Thiruppallandu

திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா

1. கோயில் - ஒளி வளர் விளக்கே

திருமாளிகைத்தேவர்

1. கோயில் - ஒளி வளர் விளக்கே

1

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே ! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ! சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே ! அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.

2

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள் இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும் தூயநற் சோதியுள் சோதீ ! அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மாலறி யாமைப் படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே.

3

தற்பொருள் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா ! சாமகண்டா ! அண்ட வாணா ! நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத் தந்தபொன் அம்பலத்து ஆடி ! கற்பமாய் உலகாய் அல்லையா னையைத் தொண்டனேன் கருதுமா கருதே.

4

பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என் பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே ! கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் மகள்உமை யவள்களை கண்ணே ! அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும் அப்பனே அம்பலத்து அமுதே ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத் தொண்டனேன் உரைக்குமாறு உரையே.

5

கோலமே மேலை வானவர் கோவே ! குணங்குறி இறந்ததோர் குணமே ! காலமே கங்கை நாயகா எங்கள் காலகா லா! காம நாசா ! ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன் கோயில்கொண்டு ஆடவல் லானே ! ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே.

6

நீறணி பவளக் குன்றமே ! நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே ! வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா ! ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே ! ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத் தொண்டனேன் இசையுமாறு இசையே.

7

தனதன்நல் தோழா சங்கரா ! சூல பாணியே! தாணுவே சிவனே ! கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே ! அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரசே கரனே ! உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே.

8

திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் தனத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே ! அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய் ஆலின்கீழ் இருந்தஅம் பலவா ! புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே.

9

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம் நெறித்தரு ளியவுருத் திரனே ! அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட ஆடம்பொன் னம்பலத்து ஆடும் சொக்கனே ! எவர்க்கும் தொடர்வரி யாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே.

10

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு அருள்புரி வள்ளலே ! மருளார் இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே ! அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ் அடர்த்தபொன் னம்பலத் தரசே ! விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே.

11

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன்திரு மாலொடு மயங்கி முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள் அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள் நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே.