Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

42. சென்னிப்பத்து - சிவவிளைவு

மாணிக்கவாசகர்

42. சென்னிப்பத்து - சிவவிளைவு (திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)

579

தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான் தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே.

580

அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே.

581

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன் மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான் பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.

582

பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.

583

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான் வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான் காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.

584

சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம் பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும் முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.

585

பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான் அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.

586

புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும் எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.

587

வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான் அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.

588

முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச் சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும் பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே.