Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம்

மாணிக்கவாசகர்

17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (தில்லையில் அருளியது - கலிவிருத்தம்)

338

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும்.

339

கண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.

340

நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.

341

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்ன அன்னே என்னும்.

342

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும்.

343

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதியசம் அன்னே என்னும்.

344

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயந்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்.

345

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும்.

346

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே என்னும்.

347

கொன்றை மதியமும் கூவின மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே என்னும்.