திருநனிபள்ளி பண் - பஞ்சமம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.97 திருநனிபள்ளி பண் - பஞ்சமம்
சுந்தரமூர்த்தி நாயனார்
ஆதியன் ஆதிரை யன்அயன் மால்அறி தற்கரிய சோதியன் சொற்பொரு ளாய்ச்சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
உறவிலி ஊன மிலிஉண ரார்புரம் மூன்றெரியச் செறுவிலி தன்னினை வார்வினை யாயின தேய்ந்தழிய அறவில கும்மரு ளான்மரு ளார்பொழில் வண்டறையும் நறவிரி கொன்றையி னான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
வானுடை யான்பெரி யான்மனத் தாலும்நினைப் பரியான் ஆனிடை ஐந்தமர்ந் தான்அணு வாகியோர் தீயுருக்கொண் டூனுடை இவ்வுட லம்ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான் நானுடை மாடெம் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
ஓடுடை யன்கல னாவுடை கோவண வன்உமையோர் பாடுடை யன்பலி தேர்ந்துண்ணும் பண்புடை யன்பயிலக் காடுடை யன்னிட மாமலை ஏழுங் கருங்கடல்சூழ் நாடுடை நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
பண்ணற் கரிய தொருபடை ஆழி தனைப்படைத்துக் கண்ணற் கருள்புரிந் தான்கரு தாதவர் வேள்விஅவி உண்ணற் கிமையவ ரையுருண் டோ ட உதைத்துகந்து நண்ணற் கரிய பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
மல்கிய செஞ்சடை மேல்மதி யும்மர வும்முடனே புல்கிய ஆரணன் எம்புனி தன்புரி நூல்விகிர்தன் மெல்கிய விற்றொழி லான்விருப் பன்பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெரு மான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
அங்கமோ ராறவை யும்அரு மாமறை வேள்விகளும் எங்கும் இருந்தந் தணர்எரி மூன்றவை ஓம்புமிடம் பங்கய மாமுகத் தாளுமை பங்கன் உறைகோயில் செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே.
திங்கட் குறுந்தெரி யற்றிகழ் கண்ணியன் நுண்ணியனாய் நங்கட் பிணிகளை வான்அரு மாமருந் தேழ்பிறப்பும் மங்கத் திருவிர லால்அடர்த் தான்வல் லரக்கனையும் நங்கட் கருளும் பிரான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
ஏன மருப்பினொ டும்மெழில் ஆமையும் பூண்டுகந்து வான மதிளர ணம்மலை யேசிலை யாவளைத்தான் ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞானசம் பந்தற்கன்று ஞானம் அருள்புரிந் தான்நண்ணும் ஊர்நனி பள்ளியதே.
காலமும் நாழிகை யுந்நனி பள்ளி மனத்தினுள்கி கோலம தாயவ னைக்குளிர் நாவல ஊரன்சொன்ன மாலை மதித்துரைப் பார்மண் மறந்துவா னோருலகிற் சாலநல் லின்பமெய் தித்தவ லோகத் திருப்பவரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நற்றுணையப்பர், தேவியார் - பர்வதராசபுத்திரி.