திருச்சோற்றுத்துறை பண் - கௌசிகம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.94 திருச்சோற்றுத்துறை பண் - கௌசிகம்
சுந்தரமூர்த்தி நாயனார்
அழல்நீர் ஒழுகி யனைய சடையும் உழையீ ருரியும் உடையான் இடமாம் கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் அமலன் இடமாம் இண்டை கொண்டன் பிடைய றாத தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே.
கோல அரவுங் கொக்கின் இறகும் மாலை மதியும் வைத்தான் இடமாம் ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ் சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.
பளிக்குத் தாரை பவள வெற்பிற் குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம் அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந் துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே.
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு வதையுஞ் செய்த மைந்தன் இடமாம் திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந் துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே.
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட பேதைப் பெருமான் பேணும் பதியாம் சீதப் புனலுண் டெரியைக் காலுஞ் சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.
காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த ஓமக் கடலார் உகந்த இடமாம் தேமென் குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பார் சோற்றுத் துறையே.
இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே.
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள் முற்றா மதிசேர் முதல்வன் பாதத் தற்றார் அடியார் அடிநாய் ஊரன் சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.