Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.78 திருக்கேதாரம் பண் - நட்டபாடை

சுந்தரமூர்த்தி நாயனார்

7.78

திருக்கேதாரம் பண் - நட்டபாடை

792

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங் கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.

793

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர் குறிகூவிய கூற்றங்கொளும் நாளாலறம் உளவே அறிவானிலும் அறிவானல நறுநீரொடு சோறு கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே.

794

கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங் கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச் செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.

795

உழக்கேயுண்டு படைத்தீட்டிவைத் திழப்பார்களுஞ் சிலர்கள் வழக்கேயெனிற் பிழைக்கேமென்பர் மதிமாந்திய மாந்தர் சழக்கேபறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின் கிழக்கேசல மிடுவார்தொழு கேதாரமெ னீரே.

796

வாளோடிய தடங்கண்ணியர் வலையிலழுந் தாதே நாளோடிய நமனார்தமர் நணுகாமுனம் நணுகி ஆளாயுய்ம்மின் அடிகட்கிடம் அதுவேயெனில் இதுவே கீளோடர வசைத்தானிடங் கேதாரமெ னீரே.

797

தளிசாலைகள் தவமாவது தம்மைப்பெறி லன்றே குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி தெளியீருளஞ் சீபர்ப்பதந் தெற்குவடக் காகக் கிளிவாழையொண் கனிகீறியுண் கேதாரமெ னீரே.

798

பண்ணின்றமிழ் இசைபாடலின் பழவேய்முழ வதிரக் கண்ணின்னொளி கனகச்சுனை வயிரம்மவை சொரிய மண்ணின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண் டெறியக் கிண்ணென்றிசை முரலுந்திருக் கேதாரமெ னீரே.

799

முளைக்கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத் துளைக்கைக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவி வளைக்கைப்பொழி மழைகூர்தர மயில்மான்பிணை நிலத்தைக் கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.

800

பொதியேசுமந் துழல்வீர்பொதி அவமாவதும் அறியீர் மதிமாந்திய வழியேசென்று குழிவீழ்வதும் வினையாற் கதிசூழ்கடல் இலங்கைக்கிறை மலங்கவரை அடர்த்துக் கெதிபேறுசெய் திருந்தானிடங் கேதாரமெ னீரே.

801

நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவன் அடியார்களுக் கடியானடித் தொண்டன் தேவன்றிருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே.

இத்தலம் வடநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கேதாரேசுவரர், தேவியார் - கேதாரேசுவரியம்மை.