திருநாட்டுத்தொகை பண் - இந்தளம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.12 திருநாட்டுத்தொகை பண் - இந்தளம்
சுந்தரமூர்த்தி நாயனார்
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர் தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம் வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.
அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர் தண்டந் தோட்டந்தண் டங்குறை தண்டலை யாலங்காடு கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் கைநாட்டுக் குறுக்கையே.
மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதல்வனூர் நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பனூர் கோல நீற்றன்குற் றாலங் குரங்கணின் முட்டமும் வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.
தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர் நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.
குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம் மழலை யேற்று மணாளன் இடந்தட மால்வரைக் கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும் மிழலை நாட்டு மிழலைவெண் ணிநாட்டு மிழலையே.
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே.
ஈழ நாட்டுமா தோட்டந்தென் னாட்டிரா மேச்சுரம் சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.
நாளும் நன்னிலந் தென்பனை யூர்வட கஞ்சனூர் நீள நீள்சடை யான்நெல்லிக் காவு நெடுங்களங் காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் வேளார் நாட்டுவே ளூர்விளத் தூர்நாட்டு விளத்தூரே.
தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன் தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம் பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.
மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணன் வலஞ்சுழி பைகொள் வாளர வாட்டித் திரியும் பரமனூர் செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன் றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.
பேணி நாடத னிற்றிரி யும்பெரு மான்றனை ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை நாணி ஊரன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்சொல் பாணி யாலிவை யேத்துவார் சேர்பர லோகமே.