திருவெண்ணெய்நல்லூர் பண் - இந்தளம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.1 திருவெண்ணெய்நல்லூர்
சுந்தரமூர்த்தி நாயனார்
பித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.
பாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய் ஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
ஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
ஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.
மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.