மனத்தொகை - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.96 மனத்தொகை - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம் மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல் என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.
முக்க ணும்முடை யாய்முனி கள்பலர் தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ டக்க ணும்மரை யாயரு ளெய்தலா தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே.
பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை முனியாய் நீயுல கம்முழு தாளினுந் தனியாய் நீசரண் நீசல மேபெரி தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.
மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக் குறையு மாயினை கோளர வோடொரு பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே.
பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள் ஆர்த்தா யாடர வோடன லாடிய கூத்தா நின்குரை யார்கழ லேயல தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.
பைம்மா லும்மர வாபர மாபசு மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும் அம்மா லல்லது மற்றடி நாயினேற் கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே.
வெப்பத் தின்மன மாசு விளக்கிய செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும் நிகழு மொண்பொரு ளாயின நீதியென் புகழு மாறு மலானுன பொன்னடி இகழு மாறிலன் எந்தை பிரானிரே.
கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை எப்பற் றியறி தற்கரி யாயருள் அப்பற் றல்லது மற்றடி நாயினேன் எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே.
எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம் எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார் எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே.