Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.89 தனி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.89

தனி - திருக்குறுந்தொகை

875

ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம் ஒன்று கீளுமை யோடு முடுத்தது ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே.

876

இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில் இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள் இரண்டு மில்லிள மானெமை யாளுகந் திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே.

877

மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் மூன்று மாயின மூவிலைச் சூலத்தன் மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன் மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே.

878

நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல் நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம் நாலு வேதஞ் சரித்தது நன்னெறி நாலு போலெம் அகத்துறை நாதனே.

879

அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம் அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன் அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே.

880

ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன் ஆறு சூடிய அண்ட முதல்வனார் ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள் ஆறு போலெம் அகத்துறை ஆதியே.

881

ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல் ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம் பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல் ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.

882

எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில் எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே.

883

ஒன்ப தொன்பதி யானை யொளிகளி றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே.

884

பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல் பத்து நூறவன் பல்சடை தோண்மிசை பத்தி யாமில மாதலின் ஞானத்தாற் பத்தி யானிடங் கொண்டது பள்ளியே.