Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.78 திருக்கோடிகா - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.78

திருக்கோடிகா - திருக்குறுந்தொகை

780

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே.

781

வாடி வாழ்வதென் னாவது மாதர்பால் ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங் கோடி காவனைக் கூறீரேற் கூறினேன் பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.

782

முல்லை நன்முறு வல்லுமை பங்கனார் தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார் கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங் கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.

783

நாவ ளம்பெறு மாறும னன்னுதல் ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற் கோம ளஞ்சடைக் கோடிகா வாவென ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே.

784

வீறு தான்பெறு வார்சில ராகிலும் நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற் கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால் ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.

785

நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி யேசற வுந்தெரி யாததோர் கோடி காவனைக் கூறாத நாளெலாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே. (*) இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

786

வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர் குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.