Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.76 திருக்கானூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.76

திருக்கானூர் - திருக்குறுந்தொகை

761

திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங் கருவ னாகி முளைத்தவன் கானூரிற் பரம னாய பரஞ்சுடர் காண்மினே.

762

பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள் கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப் புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே.

763

தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம் மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல் காயத் தேயுளன் கானூர் முளையினை வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.

764

குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண் நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன் அறிய லுற்றிரேல் கானூர் முளையவன் செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.

765

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள் சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில் அத்தன் பாத மடைதல் கருமமே.

766

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன் செல்வ மல்கு திருக்கானூ ரீசனை எல்லி யும்பக லும்மிசை வானவர் சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.

767

நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங் காரு மாருதங் கானூர் முளைத்தவன் சேர்வு மொன்றறி யாது திசைதிசை ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே.

768

ஓமத் தோடயன் மாலறி யாவணம் வீமப் பேரொளி யாய விழுப்பொருள் காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. (*) இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

769

வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல் தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன் கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.