Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.65 திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.65

திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை

653

பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான் நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார் பாவ மாயின பாறிப் பறையவே தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

654

என்ன னென்மனை எந்தையெ னாருயிர் தன்னன் றன்னடி யேன்றனமாகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே.

655

குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர் கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.

656

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான் தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான் மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப் பூவ னூர்புகு வார்வினை போகுமே.

657

புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல் நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர் தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல் வல்ல மூரென வல்வினை மாயுமே.

658

அனுச யப்பட்ட துவிது வென்னாதே கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார் மனித ரிற்றலை யான மனிதரே.

659

ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர் பாதி யானான் பரந்த பெரும்படைப் பூத நாதன்தென் பூவனூர் நாதனே.

660

பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில் நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங் கோவ லூர்குட வாயில் கொடுமுடி மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.

661

ஏவ மேது மிலாவம ணேதலர் பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் தேவ தேவன் திருநெறி யாகிய பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.

662

நார ணன்னொடு நான்முகன் இந்திரன் வார ணன்கும ரன்வணங் குங்கழற் பூர ணன்திருப் பூவனூர் மேவிய கார ணன்னெனை யாளுடைக் காளையே.

663

மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - புஷ்பவனநாதர் தேவியார் - கற்பகவல்லியம்மை.