Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.24

திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை

236

ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே ஒற்றி யூர வொருசடை வைத்தவன் ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே.

237

வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள் ஈட்ட வேயிரு ளாடி இடுபிணக் காட்டி லோரி கடிக்க எடுத்ததோர் ஓட்டை வெண்டலைக் கையொற்றி யூரரே.

238

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின் ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம் ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.

239

சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர் மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய் ஒற்றி யூர்புக் குறையும் ஒருவரே.

240

புற்றில் வாளர வாட்டி உமையொடு பெற்ற மேறுகந் தேறும் பெருமையான் மற்றை யாரொடு வானவ ருந்தொழ ஒற்றி யூருறை வானோர் கபாலியே.

241

போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர் மாது தாழ்சடை வைத்த மணாளனார் ஓது வேதிய னார்திரு வொற்றியூர் பாத மேத்தப் பறையுநம் பாவமே.

242

பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங் கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும் உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர் நிலவி னானடி யேயடை நெஞ்சமே.

243

ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று ஒன்று போலும் உதைத்துக் களைந்தது ஒன்று போலொளி மாமதி சூடிற்று ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.

244

படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர் சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர் உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர் அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.

245

வரையி னாருயர் தோலுடை மன்னனை வரையி னால்வலி செற்றவர் வாழ்விடந் திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர் உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.