ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.100 ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ அத்த னென்றரி யோடு பிரமனுந் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க் கெல்லாம் மாதே வனலாற் றேவர்மற் றில்லையே.
கூவ லாமை குரைகட லாமையைக் கூவ லோடொக்கு மோகட லென்றல்போற் பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற் தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார்க் கீவ னையிமை யோர்முடி தன்னடிச் சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற் சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன துருவ ருக்கம தாவ துணர்கிலார் அரிய யற்கரி யானை அயர்த்துப்போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே.
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்க னாவான் அரனுரு வல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தி னைநினை யார்கன் மனவரே.
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள் பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர் கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.