திருக்கண்டியூர் - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான் ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.
வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத் தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன் கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த ஊனமில் வேத முடையானை நாமடி யுள்குவதே.
பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியுங் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே.
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான் கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான் கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான் அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே.
பற்றியோ ரானை யுரித்த பிரான்பவ ளத்திரள்போல் முற்றும் அணிந்ததோர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே.
போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவஞ் சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக் காப்பது காரண மாகக்கொண் டான்கண்டி யூரிருந்த கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை யாமண்டர் கூறுவதே.
அட்டது காலனை ஆய்ந்தது வேதமா றங்கமன்று சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக் கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.
அட்டும் ஒலிநீர் அணிமதி யும்மல ரானவெல்லாம் இட்டுப் பொதியுஞ் சடைமுடி யான்இண்டை மாலையங்கைக் கட்டும் அரவது தானுடை யான்கண்டி யூரிருந்த கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே.
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத் தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக் காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரான்அங்க மாறினையும் ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.
மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத் தண்டி அமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி உண்ட பிரான்நஞ் சொளித்தபி ரான்அஞ்சி யோடிநண்ணக் கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை