திருவையாறு - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.92 திருவையாறு - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி அந்திப் பிறையணிந் தாடும்ஐ யாறன் அடித்தலமே.
இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தே பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க் கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென் றழித்தன ஆறங்க மானஐ யாறன் அடித்தலமே.
மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய் கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத் துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க் கணியன சேயன தேவர்க்கை யாறன் அடித்தலமே.
இருள்தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின் றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே.
எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்து வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய் விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ டழுவார்க் கமுதங்கள் காண்கஐ யாறன் அடித்தலமே.
துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய்பொருந்தா அன்பர்க் கணியன காண்கஐ யாறன் அடித்தலமே.
களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன் தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ யாறன் அடித்தலமே.
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால் அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ யாறன் அடித்தலமே.
பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க் கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட் டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே.
நின்போல் அமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே.