திருஅங்கமாலை பண் - சாதாரி
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.9 திருஅங்கமாலை
திருநாவுக்கரசர்
தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ.
மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.
கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்.
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் வாக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்.
உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றார் ஆருளரோ.
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.