திருநெய்த்தானம் - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக் காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான் ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம் நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் திருச்சடைமேற் பாய்ந்தகங் கைப்புனற் பன்முக மாகிப் பரந்தொலிப்ப ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ ஏந்திள மங்கையும் நீயும்நெய்த் தானத் திருந்ததுவே.
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற் சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியுங் குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேற் சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து நட்டம் பலபயின் றாடுவர் நாகம் அரைக் கசைத்துச் சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான் இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும் மெய்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான் மைமலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பால்மகிழ்ந்தான் நின்மல னாடல் நிலயநெய்த் தானத் திருந்தவனே.
பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே போந்தார் புறவிசை பாடவும் ஆடவுங் கேட்டருளிச் சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன் முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான் சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான் செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன் உரித்த கரியுரி மூடியொன் னார்மதில் மூன்றுடனே எரித்த சிலையினன் ஈடழியா தென்னை ஆண்டுகொண்ட தரித்த உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல் வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான் தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து நீங்கான் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால் மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக் காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவோர் வார்சடையை நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே.