Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.73 திருச்சேறை - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.73

திருச்சேறை - திருநேரிசை

707

பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும் அருந்திரு மேனி தன்பால் அங்கொரு பாக மாகத் திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

708

ஓர்த்துள வாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப் பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாந் தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

709

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம் நின்றுதங் கழல்க ளேத்தும் நீள்சிலை விசய னுக்கு வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச் சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

710

அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய் அநேக காலம் வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீர தற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கைச் செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

711

நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை எறிந்தமா ணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச் சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

712

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம் உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

713

சுற்றுமுன் இமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி மற்றெமை உயக்கொள் என்ன மன்னுவான் புரங்கள் மூன்றும் உற்றொரு நொடியின் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச் செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

714

முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும் எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய அந்தமில் சோதி தன்னை அடிமுடி யறியா வண்ணஞ் செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. (*) இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

715

ஒருவரும் நிக ரிலாத ஒண்டிறல் அரக்கன் ஓடிப் பெருவரை யெடுத்த திண்டோ ள் பிறங்கிய முடிகள் இற்று மருவியெம் பெருமா னென்ன மலரடி மெள்ள வாங்கித் திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.