திருநாகைக்காரோணம் - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை
திருநாவுக்கரசர்
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.
வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட செய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங் கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூல மான கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட ஒருத்தனை உணர்த லால்நாம் உய்ந்தவா நெஞ்சி னீரே.
மண்டனை இரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர் தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட அண்டனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே.
நிறைபுனல் அணிந்த சென்னி நீணிலா அரவஞ் சூடி மறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட இறைவனை நாளு மேத்த இடும்பைபோய் இன்ப மாமே.
வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும் உம்பனை உம்பர் கோனை நாகைக்கா ரோண மேய செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம்நாம் உய்ந்த வாறே.
வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென் றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசரம் அருளி னானை மங்கைமார் ஆட லோவா மன்னுகா ரோணத் தானைக் கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.
தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால் செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார் கற்றவர் பயிலும் நாகைக் காரோணங் கருதி யேத்தப் பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே. (*) இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத் தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான் இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகந் திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.