Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.67

திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

649

வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப் புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன் அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய் திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

650

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன் அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய் தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

651

கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை ஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன் சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

652

கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவே காட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோ சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

653

பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

654

ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும் மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி நானெலா மினைய கால நண்ணிலேன் எண்ண மில்லேன் தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

655

சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்து பேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன் சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.

656

பொய்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து பைமறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று கைமறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன் சென்னெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.

657

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

658

விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள் வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று பருவரை யனைய தோளும் முடிகளும் பாரி வீழத் திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.