Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.33 திருமறைக்காடு - திரு நேரிசை

திருநாவுக்கரசர்

4.33

திருமறைக்காடு - திரு நேரிசை

324

இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்ற சுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலுஞ் சந்திர னோடுங் கங்கை அரவையுஞ் சடையுள் வைத்து மந்திர மானார் போலும் மாமறைக் காட னாரே.

325

தேயன நாட ராகித் தேவர்கள் தேவர் போலும் பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின் காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர் மாயன நாடர் போலும் மாமறைக் காட னாரே.

326

அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவு ணாதே சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து மறுமையும் இம்மை யாவார் மாமறைக் காட னாரே.

327

கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.

328

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப் பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக் கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற எந்தை மண்ணினார் வலங்கொண் டேத்தும் மாமறைக் காட னாரே.

329

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார் தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார் திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.

330

கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார் வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய் நட்ட மாடி இட்டமாய்க் கங்கை யோடு மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே.

331

கனத்தினார் வலி யுடைய கடிமதில் அரணம் மூன்றுஞ் சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலுந் தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே.

332

தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள் காசினைக் கனலை என்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு மாசினைத் தீர்ப்பர் போலும் மாமறைக் காட னாரே.

333

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டிற் பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே துணிவுடை அரக்க னோடி எடுத்தலுந் தோகை அஞ்ச மணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.