Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.102 திருவாரூர் - திருவிருத்தம்

திருநாவுக்கரசர்

4.102

திருவாரூர் - திருவிருத்தம்

976

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான் சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலத்தானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

977

மற்றிட மின்றி மனைதுறந் தல்லுணா வல்லமணர் சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனாய்ப் புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

978

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ செருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடையாத் திருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலத் தானன்செங்கட் பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

979

மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட் டீசனை யேநினைந் தேசறு வேனுக்கும் உண்டுகொலோ தேசனை ஆரூர்த் திருமூலத் தானனைச் சிந்தைசெய்து பூசனைப் பூசரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

980

அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்று வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலத் தானனுக்குப் பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

981

வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோ தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலத் தானன்செய்ய பூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

982

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட் டெண்ணிற் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோ திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலத் தானனெங்கள் புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

983

கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக் கச்சுகம் என்னுங்குண்டர் உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ திருப்பொலி ஆரூர்த் திருமூலத் தானன் திருக்கயிலைப் பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

984

கையி லிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரைவிட் டுய்யும் நெறிகண் டிங்குய்யப் போந்தேனுக்கு முண்டுகொலோ ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலத் தானனுக்குப் பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

985

குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட் டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ மற்பொலி தோளான் இராவணன் றன்வலி வாட்டுவித்த பொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.