Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.67 திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம்

திருஞானசம்பந்தர்

3.67

திருப்பிரமபுரம் - வழிமொழித்திருவிராகம் பண் - சாதாரி

714

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப் புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம் வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற் பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

715

தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற் கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே ஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன் வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே.

716

பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர்க் ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம் பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர் புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே.

717

அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித் துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம் வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர் வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.

718

ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர் தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன் பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற் பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.

719

நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென் றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம் அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.

720

அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக் கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம் பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச் சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே.

721

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங் குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும் புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.

722

விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால் கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம் மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச் சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.

723

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங் கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக் காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே.

724

நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான் மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம் மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக் கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.

725

ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே.